பருத்திவீரன் திரைப்படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் கார்த்தி, தற்போது 25வது படத்தை நெருங்கி இருக்கிறார். ஜப்பான் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை, குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை எடுத்த ராஜூ முருகன் இயக்குகிறார். இந்த திரைப்படம் நகை திருட்டை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்பட்டது.
அதே சமயம், பிரபல கொள்ளையனான திருவாரூர் முருகன் கதையைதான், ராஜூ முருகன் கார்த்தியை வைத்து இயக்குவதாகவும் தெரிகிறது. தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவில் நூற்றுக்கணக்கான கொள்ளை சம்பவங்களில் திருவாரூர் முருகன் ஈடுபட்டுள்ளார்.

தனக்கென ஒரு தனி கூட்டத்தை ஏற்படுத்திய அவர் முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் திருச்சியில் உள்ள நகைக்கடையில் அவரது கும்பல் கொள்ளை அடித்தது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்த போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர், உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.
இப்படி இருக்க திருவாரூர் முருகன் கதையை ராஜூ முருகன் கையில் எடுத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் சூட்டிங் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து, 96 இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். முதல் படத்தில் பள்ளிக் காதலை கண்முன் நிறுத்தி நம்மை கலங்கடித்த பிரேம்குமார், தனது அடுத்த படத்தில் குடும்ப பாசத்தின் உறவுகளை விவரிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை, சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்குப் பிறகு சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளிலும் கார்த்தி கவனம் செலுத்துகிறார். பி எஸ் மித்ரன் இயக்கும் இந்த திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்த நிலையில், விரைவில் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி பிசியாக இருக்கும் நடிகர் கார்த்தி, தனது 26வது படத்தை சூது கவ்வும், காதலும் கடந்து போகும் இயக்குனர் நலன் குமாரசாமிக்கு கொடுத்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில், சத்யராஜ் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது ராஜ்கிரண் இதில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொம்பன் மற்றும் விரும்பன் படத்தில் இந்தக் கூட்டணி கலக்கி இருந்ததால், நலன் குமார் சாமி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்துள்ளது.